×

சொத்துக்களை அபகரித்ததாக நடிகை கவுதமி புகார் சினிமா தயாரிப்பாளர் அழகப்பன் மனைவி, மருமகளுக்கு ஜாமீன்: நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை கவுதமி 2004ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது, அவரது சொத்துக்களை விற்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சி.அழகப்பன் என்பவரை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்திருந்தார். அதன்படி 2004ல் திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கிய அழகப்பன், அந்த நிலத்தை கவுதமி பெயரிலும், தனது மனைவி நாச்சல் பெயரிலும் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக கவுதமி அளித்த புகாரில் அழகப்பன், நாச்சல், இவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அழகப்பனின் மனைவி நாச்சல் மற்றும் மருமகள் ஆர்த்தி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில், நாச்சலின் உடல் நலனை கருத்தில் கொண்டும், மருமகள் ஆர்த்திக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு கவுதமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி விசாரணை அதிகாரி முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விசாரணை தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 5ம் தேதி தாக்கல் செய்யவும், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு அனுமதி வழங்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8க்கு தள்ளிவைத்தார்.

The post சொத்துக்களை அபகரித்ததாக நடிகை கவுதமி புகார் சினிமா தயாரிப்பாளர் அழகப்பன் மனைவி, மருமகளுக்கு ஜாமீன்: நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gauthami ,Alagappan ,Madras High Court ,Chennai ,C. Azhakappan ,Tiruvallur district ,Chengalpattu district ,Neelangarai ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!